4 மாதங்களுக்கு பின் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்
4 மாதங்களுக்கு பின் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்
ADDED : மே 27, 2024 02:20 AM
டெல் அவிவ் : இஸ்ரேல் மீது கடந்த நான்கு மாதங்களாக ஏவுகணை தாக்குதல் இல்லாத நிலையில், தலைநகர் டெல் அவிவ் மீது மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துஉள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்., 7ல் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது.
கடந்த ஏழு மாதங்களாக நீடித்து வரும் போரில் இதுவரை 36,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் எதுவும் நடத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படை தெரிவித்து உள்ளது.
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காசா முனையில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்டதாக ஹமாசின் அல் அகுசா டிவி தெரிவித்துள்ளது.இதையடுத்து, ராக்கெட் வாயிலாக தாக்குதல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக டெல் அவிவ் நகர மக்களை இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான அபாய ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து, நகரின் பல பகுதிகளில் நின்றிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் வீடியோவை இஸ்ரேல் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இருப்பினும், உயிர்பலி அல்லது எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என, அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

