ADDED : மார் 09, 2025 12:26 AM

வாஷிங்டன்: இந்தியா அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து மூன்றாவது நாளாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது வரி விகிதத்தை குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
தங்களுடைய பொருட்களுக்கான இறக்குமதி வரியை பல நாடுகளும் அதிகமாக விதித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதைத் தொடர்ந்து, வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்தியா, சீனா போன்ற நாடுகள் மிகக் கடுமையான வரியை விதிப்பதால், அவற்றுக்கு பரஸ்பரம் அதே வரி விதிக்கப்படும் என, டிரம்ப் அறிவித்திருந்தார். வரும், ஏப்., 2 முதல் இது அமலுக்கு வருவதாகவும் கூறியிருந்தார்.
கடந்த மூன்று நாட்களாக, 'இந்தியா அதிக வரியை விதிக்கிறது, இதனால் அங்கு நம் பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை' என, டிரம்ப் கூறி வருகிறார். குறிப்பாக ஆட்டோமொபைல் துறைக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:
நம் பொருளாதார, நிதி மற்றும் வர்த்தக நிலைப்பாடுகளில் இருந்து பார்க்கும்போது, நம் நாடு கடந்த பல ஆண்டுகளாக உலக நாடுகளால் கிழித்தெறியப்பட்டு வந்துள்ளது. கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் நம் மீது அதிக வரியை விதித்து வந்துள்ளன.
நம் பொருட்களுக்கு இந்தியா அதிக வரியை விதித்து வருகிறது. தற்போது, அந்த வரி விகிதங்களை வெகுவாக குறைப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. வரி விதிப்பில் உள்ள பிரச்னையை அம்பலப்படுத்திய பின், வரியைக் குறைப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.
நம் பொருட்களை இந்தியாவில் விற்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள், அதிகளவு வரிகள் விதிக்கப்பட்டு வந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.

