ADDED : பிப் 22, 2025 03:50 AM

நியூயார்க் : அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., இயக்குநராக, இந்திய வம்சாவளி காஷ் படேல், 44, நியமிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எப்.பிஐ., இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை நியமித்தார்.
இந்த நியமனத்துக்கு, 51க்கு 49 என்ற ஓட்டு வீதத்தில் அமெரிக்க செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது. ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும், 51 ஓட்டுகள் காஷ் படேலுக்கு ஆதரவாக கிடைத்தன.
அமெரிக்காவின் உள்நாட்டு உளவு பணி, ஊழல் போன்ற குற்றங்களை கையாளுவது எப்.பி.ஐ., வேலை. அதன் இயக்குநராக நியமிக்கப்படுபவர், 10 ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
செனட் சபை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ள காஷ் படேல், அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்களை எப்.பி.ஐ., வேட்டையாடும் என்று, தெரிவித்தார்.
காஷ் படேலின் பூர்வீகம் குஜராத். நியுயார்க்கில், 'குட்டி இந்தியா' என அழைக்கப்படும் குயின்ஸ் பகுதியில் காஷ் படேல் பிறந்தார். அவரது பெற்றோர், இப்போதும் குஜராத் வந்து செல்வது வழக்கம்.

