அதிக நாள் தங்கியுள்ள சுனிதா வில்லியம்சிற்கு உடல் ரீதியாக பாதிப்பா ?
அதிக நாள் தங்கியுள்ள சுனிதா வில்லியம்சிற்கு உடல் ரீதியாக பாதிப்பா ?
ADDED : ஆக 04, 2024 02:59 AM

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் 50 வது நாளை கடந்து விட்ட நிலையில் சுனிதா வில்லியம்சிற்கு உடல் ரீதியாக பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் ஜூன் 5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு, ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்
இருவரும் திட்டமிட்டப்படி ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடந்து இருவரும் 50வது நாளை கடந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் சுனிதா வில்லியம்சிற்கு எடையிழப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு போன்ற பிரச்னைகள் நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறியது,
விண்வெளியில் புவியீர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்கும். இதில் தசைகள், எலும்புகளுக்கு எடையை தூக்கும் வேலை கிடையாது. நாளடைவில் தசை நார் பலவீனமடைந்து செயல்பாடுகள் குறையும். எலும்பும் பலவீனமடைந்து உடையும் வாய்ப்பு உள்ளது.
விண்வெளியில் அதிக நாள் இருப்பதால் கண்களில் அழுத்தம் அதிகரித்து பார்வை மங்கும், இரட்டை பார்வை தோனறும் இவ்வாறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.