எங்க டீல் இஸ்ரேலுக்கு ஓகே; நீங்க என்ன சொல்றீங்க: ஹமாஸ் அமைப்பிடம் கேட்கிறது அமெரிக்கா
எங்க டீல் இஸ்ரேலுக்கு ஓகே; நீங்க என்ன சொல்றீங்க: ஹமாஸ் அமைப்பிடம் கேட்கிறது அமெரிக்கா
ADDED : ஆக 20, 2024 07:48 AM

வாஷிங்டன்: 'போர்நிறுத்தத்திற்கான எங்கள் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது' என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும், 2023 அக்., 7 முதல் போர் நடக்கிறது. காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட, 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் கொண்டு வர, கடந்த வாரம் கத்தாரில் பேச்சு நடந்தது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
அமெரிக்கா
காசா பகுதியில், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான, வன்முறைக் கொள்கைகளை இஸ்ரேல் தொடர்வதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் காசா போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டும் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகஸ்ட் 18ம் தேதி இஸ்ரேல் வந்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், இரண்டரை மணி நேரம், ஆண்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நல்ல தருணம்
பின்னர் அவர் கூறியதாவது: காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான அமெரிக்க திட்டத்தின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. இது ஒரு நல்ல தருணம். பிணைக்கைதிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கும், போர்நிறுத்தத்தைப் பெறுவதற்கும், அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான சிறந்த பாதையில் அனைவரையும் அழைத்துச் செல்வதற்கும் கடைசி வாய்ப்பு.
ஒப்பந்தம்
பிரதமர் நெதன்யாகுவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினேன். ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது. இவ்வாறு ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

