பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மறுப்பு!: அவமானப்படுத்துவதாக ஹமாஸ் மீது புகார்
பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மறுப்பு!: அவமானப்படுத்துவதாக ஹமாஸ் மீது புகார்
ADDED : பிப் 23, 2025 11:38 PM

டெல் அவிவ்: தங்கள் நாட்டு பிணைக்கைதிகளை விடுவிக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர், அவர்களை அவமதிக்கும் வகையில் நடத்துவதாக, இஸ்ரேல் புகார் தெரிவித்துள்ளது. இதை காரணமாக காட்டி, பாலஸ்தீன பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மறுத்துள்ளது. இதனால், ஹமாஸ் - இஸ்ரேல் இடையில் மீண்டும் போர் துவங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, கடந்த 2023 அக்.,ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜன., 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும், அந்நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும் விடுவித்து வருகின்றன. அதே சமயம், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன.
இந்த சூழலில், போர் துவக்கத்துக்கு காரணமாக இருந்த காசா தாக்குதலின் போது, இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஆறு பேரை ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் விடுவித்தது.
இவர்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். பெரிய விழா போல் ஏற்பாடு செய்யப்பட்டு நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அதேசமயம், பிணைக் கைதிகளின் அருகில் ஆயுதமேந்திய ஹமாஸ் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
போலி ராணுவ உடை அணிந்து அழைத்து வரப்பட்ட மூன்று பேரும், வாகனம் வாயிலாக இஸ்ரேல் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒப்பந்தப்படி விடுவிக்கப்பட வேண்டிய 33 பிணைக்கைதிகளில் இந்த ஆறு பேர்தான் கடைசி என கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிணைக் கைதிகள் ஆயுதமேந்திய ஹமாஸ் அமைப்பினர் மத்தியில் அழைத்து வரப்பட்டு, பெருங்கூட்டத்தின் மத்தியில் அடையாளம் காட்டப்பட்டு அனுப்பி வைத்தது அவமானகரமான செயல் என, இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த செயலுக்கு ஐ.நா.,வும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கடைசியாக விடுவிக்கப்பட்டவர்களில் சிலர், ராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாத போதும், அவர்கள் ராணுவ உடையில் அழைத்து வரப்பட்டதாக இஸ்ரேல் அரசு குற்றஞ்சாட்டியது.
இது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், 'காசாவில் இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில், ஹமாஸ் முறைதவறி நடக்கிறது. பிரமாண்ட விழா போல் ஏற்பாடு செய்து, பெருங்கூட்டத்துக்கு மத்தியில் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவது மிகவும் அவமானகரமான செயல். இனி வரும் காலங்களில், இது போல் அவமானகரமான செயல் எதுவும் இருக்காது என, ஹமாஸ் தரப்பு உறுதியளிக்கும் வரை, பாலஸ்தீன பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாமதம்
இதைத்தொடர்ந்து, டெல் அவிவில் ஓபர் சிறையில் இருந்து பாலஸ்தீன பிணைக்கைதிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட்ட வாகனம், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் சிறைக்கு உள்ளே சென்றது.
ஒப்பந்தப்படி, இஸ்ரேல் தரப்பில் தற்போது 620 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் அறிக்கையால், அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
'அறிவித்தபடி, பிணைக்கைதிகளை அனுப்பாமல் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது' என, ஹமாஸ் தரப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
இதனால், போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து, மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.