மொரீஷியசில் மருத்துவமனை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
மொரீஷியசில் மருத்துவமனை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
UPDATED : ஜூலை 18, 2024 10:28 AM
ADDED : ஜூலை 18, 2024 04:36 AM

போர்ட் லுாயிஸ்: மொரீஷியசில், நம் நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார்.
ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள தீவு நாடான மொரீஷியசுக்கு, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். அந்நாட்டின் பிரதமர் பிரவீன் ஜெகன்னாத் அவரை வரவேற்றார்.
அதன்பின் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் சாஹர் திட்டத்தை முன்னெடுத்து செல்வது பற்றியும், ஆப்ரிக்க நாடுகளின் வளர்ச்சியை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், மொரீஷியசின் கிராண்ட் பைஸ் என்ற பகுதியில் நம் நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதில், எங்கள் நாட்டின் பங்களிப்பும் இருப்பதை எண்ணி, பெருமைக்கொள்கிறேன். இது, இருநாடுகளுக்கு இடையிலான நட்பின் புதிய வெளிப்பாடு,'' என்றார்.