ADDED : ஜூலை 27, 2024 11:37 PM

வாஷிங்டன்: தன்னை எதிர்த்து போட்டியிட உள்ள ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள, துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்து, கண்மூடித்தனமாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது.
போர்க்கொடி
இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
அவரை எதிர்த்து, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார்.
இதையடுத்து, வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர்.
இதையடுத்து, அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிசை, 59, வேட்பாளராக நிறுத்த ஆதரவு தெரிவித்தார்.
வரும், ஆக., 19 -- 22ல் நடக்கும் கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.
இத்தனை நாட்களாக ஜோ பைடனை விமர்சித்து வந்த டொனால்டு டிரம்ப், தற்போது கமலா ஹாரிஸ் குறித்து கூட்டங்களில் பேசி வருகிறார்.
அவர் கூறியுள்ளதாவது:
ஆப்ரிக்க - இந்தியா வம்சாவளியான கமலா ஹாரிஸ், யூதர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் யூதர்களுக்கு எதிரானவர்.
அவருடைய நிலைப்பாடு எப்போதும், யூதர்களுக்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்கும் கூட்டத்தை கமலா ஹாரிஸ் புறக்கணித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவர் யூதர்களுக்கு எதிரானவர். அவருக்கு இஸ்ரேலை பிடிக்காது. அவர் மாற மாட்டார்.
ஜோ பைடனை விட, கமலா ஹாரிஸ் மிகவும் மோசமானவர். தற்போது அமெரிக்காவை ஒரு நகைப்புக்குரிய நாடாக அவர்கள் மாற்றியுள்ளனர்.
கமலா ஹாரிஸ், எப்படி ஒரு நல்ல அதிபராக இருக்க முடியும்? அவர் கிறிஸ்துவர்களுக்கு எதிரானவர்; மார்க்சிஸ்ட் கொள்கை உள்ளவர்.
ஆச்சரியமில்லை
உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கொள்கையுடையவர்களை சேர்ப்பார்; கிறிஸ்துவர்களை கொல்ல சொல்வார்.
அவர் கருக்கலைப்புக்கு ஆதரவானவர். கரு எந்த நிலையில் இருந்தாலும் அதைக் கலைப்பதற்கு சட்டம் கொண்டு வருவார்.
எட்டு, ஒன்பது மாதத்தில் இருந்தாலும், கருவைக் கலைப்பதற்கு உத்தரவிடுவார். தப்பித் தவறிப் பிறந்துவிட்டால், அதைக் கொல்வதற்கு உத்தரவிட்டாலும் ஆச்சரியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தில், தான் கையெழுத்திட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் நேற்று தெரிவித்தார்.