இந்தியாவுடன் எந்த பிரச்னையும் இல்லை: சொல்கிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர்
இந்தியாவுடன் எந்த பிரச்னையும் இல்லை: சொல்கிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர்
ADDED : செப் 16, 2024 04:05 AM

மாலே: “மாலத்தீவில் புதிய அரசு பதவியேற்றதும், இந்தியாவுடன் மனக்கசப்பு இருந்தது உண்மை தான். இரு நாடுகளுக்கு இடையேயான தவறான புரிதல்கள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன,” என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் கூறினார்.
நம் அண்டை நாடான மாலத்தீவில், 2023ல் நடந்த அதிபர் தேர்தலில், மக்கள் தேசிய காங்., கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு வெற்றி பெற்று அதிபரானார்.
சீன ஆதரவாளரான இவர், அந்நாட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த நம் ராணுவ வீரர்களை வெளியேறும்படி உத்தரவிட்டார். இதன்படி நம் வீரர்கள் வெளியேறினர்.
இதனால் இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடியின் அந்தமான் - நிகோபார் பயணத்தை விமர்சித்து, மாலத்தீவின் அமைச்சர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்;
இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த இந்தியர்கள், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர்.
சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பியிருக்கும் அந்நாட்டுக்கு, இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் நேற்று கூறியதாவது:
மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேறும்படி, அதிபர் முகமது முய்சு உத்தரவிட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. எங்கள் அரசின் துவக்கக் காலத்தில், இந்தியாவுடன் கசப்பான உறவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியா - மாலத்தீவு இடையே இருந்த தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன. சீனா மற்றும் இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இரு நாடுகளும் மாலத்தீவை ஆதரிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.