UPDATED : மே 09, 2024 11:10 AM
ADDED : மே 09, 2024 01:45 AM

மாலே :இரு நாடுகளின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், மாலத்தீவு அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர், முதன்முறையாக நம் நாட்டிற்கு நேற்று வருகை தந்தார். நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்து பேச உள்ளார்.
நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபராக முஹமது முய்சு உள்ளார். சீன ஆதரவாளரான அவர், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதற்காக முகாமிட்டிருந்த இந்திய படைகளை வெளியேறும்படி அவர் கூறினார்.
அதன்படி, ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய வீரர்கள் வெளியேறினர். மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் வீரர்கள் நாளைக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டது.
இந்த வீரர்களுக்கு பதிலாக, இந்திய தொழில்நுட்பக் குழுவினர் அங்கு பணி செய்வர் என தெரிவிக்கப்பட்டது.
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நாளை முடிவடையும் நிலையில், அதிபர் முஹமது முய்சுவின் அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள மூசா ஜமீர், நம் நாட்டிற்கு முதன்முறையாக அரசு முறை பயணமாக டில்லிக்கு நேற்று வந்தார்.
மூன்று நாட்கள் பயணமாக வரும் அவர், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டில்லியில் இன்று சந்தித்து பேச உள்ளார்.இச்சந்திப்பின்போது, இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிப்பர் என, தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள மாலத்தீவுகளுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.