ADDED : மார் 01, 2025 01:30 AM

வாஷிங்டன்: வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 35 சதவீதமும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற பின் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார். பின் ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று நாடுகளுக்குமான வரி விதிப்பு, மார்ச் 4 முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து அதிக அளவிலான போதைப் பொருட்கள் அமெரிக்காவுக்குள் வருகின்றன. இவை பெரும்பாலும், 'பென்டானில்' எனப்படும், வலி நிவாரணி மருந்துகளின் வடிவில் வருகின்றன. இவை, சீனாவில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து வினியோகிக்கப்படுகின்றன.
இந்த ஆபத்தான விஷ போதைகளால், கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் லட்சக்கணக்கான உயிரை இது பறித்துள்ளது.
இந்த போதை அரக்கனால் அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்த போதை வினியோகம் முற்றிலும் நிற்கும் வரை அல்லது தீவிர கட்டுப்பாட்டுக்கு வரும் வரை இந்த வரி விதிப்பு தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.