கிரிக்கெட் வீரர் ஷமிக்கு முஸ்லிம் மதகுரு கண்டனம்; கிளம்பிய எதிர்ப்பு
கிரிக்கெட் வீரர் ஷமிக்கு முஸ்லிம் மதகுரு கண்டனம்; கிளம்பிய எதிர்ப்பு
UPDATED : மார் 07, 2025 03:45 PM
ADDED : மார் 07, 2025 08:43 AM

துபாய்: ரம்ஜான் நோன்பு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு கண்டனம் தெரிவித்த முஸ்லிம் மதகுருவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
கடந்த 4ம் தேதி நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்திய வீரர் முகமது ஷமியின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. அவர் 10 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது, அவர் தண்ணீர் குடித்ததற்கு முஸ்லிம் மதகுரு மவுலானா ஷகாபுதின் ரஷ்வி பரேல்வி கண்டம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நோன்பு இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. யாரெல்லாம் நோன்பை கடைபிடிக்க தவறுகிறார்களோ, அவர்கள் எல்லாம் பாவிகள். இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி நோன்பை கடைபிடிக்கவில்லை. இது குற்ற செயலாகும். நோன்பை மீறியதன் மூலம், மத கொள்கையை மீறியதுடன், பாவத்தை செய்துள்ளார்.
அவர் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறார் என்றால், அவர் ஆரோக்கியமானவராக இருக்கிறார் என்று தான் அர்த்தம். அப்படியிருக்கும் போது அவர் நோன்பை கடைபிடித்திருக்க வேண்டும். கடவுளுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும், இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நாட்டிற்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்றிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி மீதான இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அகில இந்திய முஸ்லீம் தனி சட்டவாரியத்தின் உறுப்பினர் மவுலானா கலித் ரஷித் பராங்கி மஹாலி, ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'ஷமி ஒரு கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இது போன்று பயணிப்பவர்களுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் சலுகைகள் உள்ளன. அவரிடம் யாரும் கேள்வி எழுப்ப முடியாது,' என்றார்.
ஷமியின் உறவினர் மும்தாஜ் கூறுகையில், 'இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல், சாம்பியன்ஸ் டிராபி பைனலில் கவனம் செலுத்துமாறு எங்களின் குடும்பத்தினர் ஷமியிடம் கூறியுள்ளனர். இதுபோன்ற விஷயங்கள் வெட்கக்கேடானது,' எனக் கூறினார்.