விமானப்படை தளம் மீது தாக்குதல்; வங்கதேசத்தில் ஒருவர் பலி
விமானப்படை தளம் மீது தாக்குதல்; வங்கதேசத்தில் ஒருவர் பலி
ADDED : பிப் 25, 2025 03:32 AM
டாக்கா : வங்கதேசத்தில், விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். விமான படையினரின் பதில் தாக்குதலில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், காக்ஸ் பஜார் நகரில் உள்ள சமிதிபாரா என்ற பகுதியில், அந்நாட்டின் விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள சோதனைச்சாவடியில், விமானப்படை அதிகாரிகள் நேற்று வழக்கம் போல் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த உள்ளூரைச் சேர்ந்த நபரிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆவணங்கள் இல்லாததை அடுத்து, அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த 200க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள், விமானப்படை தளத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களுக்கும், விமானப்படை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதிகாரிகள் மீது, போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
நிலைமையை கட்டுப்படுத்த, விமானப்படை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பு மோதலில், உள்ளூர் வியாபாரி ஷிஹாப் கபீர், 30, என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஷிஹாப் கபீரை விமானப்படை அதிகாரிகள் சுட்டுக் கொன்று விட்டதாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்த அதிகாரிகள், கூட்டத்தை கலைக்க டம்மி தோட்டாக்களையே பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் குறித்து வங்கதேச அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதலுக்குள்ளான விமானப்படை தளத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

