ADDED : பிப் 23, 2025 07:13 AM
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் சிறையில் இருந்த, 22 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்கள் அனைவரும் நம் நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடல் எல்லையில் மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு கடற்படையினர் கடந்த 2021ல் கைது செய்தனர். அவர்கள் அனைவரும், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்நாட்டு நீதிமன்றம் விதித்த தண்டனைக்காலம் முடிந்தும், அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி - வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் நேற்று முறைப்படி அவர்களை, பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதில், குஜராத்தைச் சேர்ந்த 18 பேர், டையூவைச் சேர்ந்த மூன்று பேர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 22 மீனவர்கள் இருந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

