எல்லை பாதுகாப்பு குறித்து பாக்., – இந்தியா பேச்சு
எல்லை பாதுகாப்பு குறித்து பாக்., – இந்தியா பேச்சு
ADDED : ஜூலை 18, 2026 07:43 PM
இஸ்லாமாபாத், ஜூலை 19–
பாகிஸ்தானில் நடைபெற்ற, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 12-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தின.
பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய நோக்கங்களுக்காக 2001ல் உருவாக்கப்பட்டது, எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இதில், சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட, 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் 12-வது உச்சி மாநாடு நம் அண்டை நாடான பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட, 10 உறுப்பு நாடுகளின் எல்லை பாதுகாப்புப்படை தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது உறுப்பு நாடுகளின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிலவும் பயங்கரவாதம், ஊடுருவல், கடத்தல் மற்றும் பிற எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்கொள்ளும் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் எல்லை பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், அண்டை நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையையும், பாதுகாப்பையும் பலப்படுத்தவும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
