பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்; அடம் பிடிக்கிறார் முன்னாள் அதிபர் டிரம்ப்
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்; அடம் பிடிக்கிறார் முன்னாள் அதிபர் டிரம்ப்
UPDATED : ஆக 04, 2024 09:06 AM
ADDED : ஆக 04, 2024 06:48 AM

வாஷிங்டன்: செப்.,10ல் ஏ.பி.சி., சேனல் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் பங்கேற்க மறுத்து விட்ட முன்னாள் அதிபர் டிரம்ப், தனக்கு நெருக்கமான பாக்ஸ் நியூஸ் சேனல் விவாதத்தில் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 5ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விலகியதால், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் செய்தி நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்பர்.
கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே,செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி செய்தி நிறுவனம் சார்பில், விவாதம் நடைபெறுவதாக இருந்தது. தற்போது, செப்.,10ல் நடக்கவிருந்த விவாதத்தை ரத்து செய்த டொனால்ட் டிரம்ப், செப்.,4ல் பாக்ஸ் நியூஸ் சேனல் விவாதத்தில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்த பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம், டிரம்புக்கு மிகவும் நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 4ம் தேதி பார்வையாளர்கள் முன்னிலையில் பாக்ஸ் செய்தி நிறுவனம் சார்பில், விவாதம் பென்சில்வேனியாவில் நடக்க உள்ளது.
கமலா கூறுவது என்ன
எந்த நேரம், எந்த இடமானாலும் விவாதம் நடத்த தயார் என்று கூறிய டிரம்ப், இப்போது ஒரு குறிப்பிட்ட இடம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு தான் வருவேன் என கூறுவது சுவாரஸ்யமாக உள்ளது என்று ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
டிரம்ப் சொல்வது இதுதான்!
'பென்சில்வேனியாவில் செப்டம்பர் 4ம் தேதி பாக்ஸ் நிறுவனம் நடத்தும் விவாதத்தில் பங்கேற்கிறேன். விதிகள் என்ன என்பது குறித்து செய்தி நிறுவனம் குறிப்பிடவில்லை என்றாலும், சி.என்.என் விவாதத்தை போல் இருக்கும் என நினைக்கிறேன்' என சமூகவலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.