பிரிட்டனில் தொடரும் வன்முறை பிரதமர் ஸ்டாமர் எச்சரிக்கை
பிரிட்டனில் தொடரும் வன்முறை பிரதமர் ஸ்டாமர் எச்சரிக்கை
ADDED : ஆக 06, 2024 01:52 AM

லண்டன் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில், சமீபத்தில் புகுந்த 17 வயது சிறுவன், அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினான்.
இதில் படுகாயமடைந்த சிறுமியர் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய சிறுவன், சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரிட்டன் அரசின் குடியேற்ற விதிகளுக்கு எதிராகவும் அங்குள்ள சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த போராட்டங்கள் பெரும்பாலும் வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களாலும், குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களாலும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், பிளாக்பூல், பெல்பாஸ்ட் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின. போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
புதிதாக பதவியேற்ற பிரதமர் கெய்ர் ஸ்டாமருக்கு இந்த போராட்டங்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளன. இந்நிலையில், போலீசார், அமைச்சர்கள், சட்ட நிபுணர்களுடன் ஸ்டாமர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கலவரங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கேற்கும் அனைவரும், இதில் பங்கேற்றதற்காக ஒரு நாள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள். இந்த நாட்டில் அனைவருக்கும் அமைதியாக வாழ உரிமை உண்டு. வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்.