ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு எதிராக வெடித்தது போராட்டம்
ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு எதிராக வெடித்தது போராட்டம்
ADDED : ஜூன் 14, 2026 10:11 PM

டெஹ்ரான்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, நாட்டின் நலன்களை விட்டுக் கொடுத்ததாக, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோருக்கு எதிராக ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு நடக்கிறது. இதை ஆமோதிக்கும் வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அமைதி ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள், ஈரானுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, டெஹ்ரானில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகம் முன் நேற்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பார்லிமென்ட் சபாநாயகர் காலிபாப் உள்ளிட்டோருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
ஈரான் – அமெரிக்கா இடையே தற்போது அமைதி ஒப்பந்தத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள தீர்மானங்கள், ஈரானின் நலன்களை போதுமான அளவு பாதுகாக்கவில்லை என்றும், முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் அதிகாரத்தை பலவீனப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் போராட்டக்காரர்கள் கூறினர்.
