ADDED : ஆக 04, 2024 02:13 AM

அபுஜா: நைஜீரியாவில் போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்களை ஒடுக்க, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள்
13 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில, கடந்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற போலா டினுபு, எரிபொருள் மானியத்தை நீக்கியதுடன், பல்வேறு அதிரடியான பொருளாதார நடவடிக்கைகளையும் அறிவித்தார். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தது; அதேசமயம், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.இதைக் கண்டித்து அவ்வப்போது நடந்து வந்த போராட்டம், கடந்த 31ம் தேதி முதல் நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது.
மோசமான ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் மக்களின் செலவுகள்
அதிகரித்து விட்டன.
தேர்தல் மற்றும் நீதித் துறைகளிலும் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமானால், 'இந்த அரசு பதவி விலக வேண்டும்' என, 19 கோரிக்கைகளை முன்வைத்து, இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடப்பதால், நைஜீரிய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தலைநகர் அபுஜா, சுலேஜா, லாகோஸ் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள் முதல், பெரியவர்கள் வரை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு மாகாணமான போர்னோவில் போராட்டக்காரர்கள் கூட்டத்தில் குண்டை வெடிக்கச் செய்ததில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைக் கண்டித்து அபுஜாவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது, போலீசார் - பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த உரிமைகள் குழு தெரிவித்துள்ளது இதையடுத்து, போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக நைஜீரிய போலீசார் தெரிவித்தனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து, போர்னோ உள்ளிட்ட ஐந்து வட மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்
பட்டுள்ளது.