மதம், மொழி குறித்து ராகுல் சர்ச்சை பேச்சு அபத்தம் ! பிரிவினையை துாண்டுவதாக பா.ஜ., பதிலடி
மதம், மொழி குறித்து ராகுல் சர்ச்சை பேச்சு அபத்தம் ! பிரிவினையை துாண்டுவதாக பா.ஜ., பதிலடி
ADDED : செப் 11, 2024 01:44 AM

வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், மதம், ஜாதி, மொழி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரிவினையை துாண்டுவதாகவும், மிகவும் அபத்தமாக அவர் பேசி வருவதாகவும் பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித்தலைவரான ராகுல், நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை கடுமையாக விமர்சித்தும், சீனாவுடன் ஒப்பிட்டு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதாகவும் பேசினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் விர்ஜினியாவில் நடந்த நிகழ்ச்சிகளில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார். அப்போது, ஆர்.எஸ்.எஸ்., தொடர்பாகவும், மதம், மொழி, ஜாதி குறித்தும் அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காப்பு வளையம்
அவர் பேசியதாவது:
இந்தியாவில் தற்போது சண்டை நடந்து வருகிறது. முதலில் இந்த சண்டை எதற்காக நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது அரசியலுக்காக நடக்கவில்லை.
இதோ இங்கே தலைப்பாகை அணிந்து அமர்ந்திருக்கிறாரே, இவரைப் போன்ற சீக்கியர்கள், இந்தியாவில் இனி தலைப்பாகை அணிந்து கொள்ள முடியுமா, 'கடா' எனப்படும் கைகளில் காப்பு வளையம் அணிய முடியுமா என்பதற்கான சண்டை நடக்கிறது.
அவர்களால், குருத்வாராவுக்கு இனி செல்ல முடியுமா என்ற சண்டை நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதங்களுக்கும் நடக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கருத்துப்படி, இந்தியாவில் ஒரு சில மாநிலங்கள், மற்ற மாநிலங்களைவிட தாழ்ந்த நிலையில் உள்ளவை. அதுபோலவே, சில மொழிகள், மதங்கள், ஏன் ஜாதிகளில் கூட, இவ்வாறு மேலானவை, தாழ்வானவை என்று ஆர்.எஸ்.எஸ்., கூறுகிறது. இதற்காகவே சண்டை நடக்கிறது.
தமிழ், மராத்தி, பெங்காலி, மணிப்பூரி ஆகிய மொழிகள் மற்ற மொழிகளைவிட கீழானவை என்பதே ஆர்.எஸ்.எஸ்., கொள்கை.
ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், மொழி, கலாசாரம் இருக்கும். ஆனால், இதெல்லாம் பா.ஜ.,வுக்கு புரியாது.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். இதைத்தான் அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது. இதில் இருந்து மொழிகள், பாரம்பரியம், வரலாறு உள்ளிட்டவற்றின் ஒன்றியமே இந்தியா என்பது அர்த்தம். ஆனால், இதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். அவர்களுக்கு ஒன்று மட்டுமே முக்கியம். அது, நாக்பூரை தலைமையிடமாக வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்பே.
இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தலில், அனைவருக்கும் சமமான போட்டி வாய்ப்பு தரப்படவில்லை. இதை வெறும், 56 இஞ்ச் மார்பளவு உள்ள பிரதமர் மோடி மட்டும் செய்யவில்லை. அவருக்கு ஆதரவாக பலரும், பல அமைப்புகளும் இருந்தன.
ஆனால், பிரதமர் மோடி மீதான பயத்தை நாங்கள் உடைத்தெறிந்தோம். தன்னால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்ற அவருடைய நினைப்பை உடைத்தெறிந்தோம். அவரும், மனதளவில் நொறுங்கிவிட்டார். தற்போது மத்தியில் ஆளும் கூட்டணி அரசும் உடைந்து விட்டது.
மனதளவில் ஏமாற்றம்
தேர்தல் முடிவுகள் வந்தவுடன், மோடி உருவாக்கியிருந்த பயம் காணாமல் போய்விட்டது. அது வரலாறாக மாறிவிட்டது. கடவுளுடன் நேரில் பேசுவதாக கூறும் மோடி, உள்ளுக்குள் பயத்தில் உள்ளார்.
லோக்சபா தேர்தல் நியாயமாக நடந்திருந்தால், பா.ஜ.,வுக்கு 240 இடங்கள் கூட கிடைத்திருக்காது. இதில் இருந்து தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்பது தெரிகிறது.
அவர் பல ஆண்டுகள் குஜராத்திலேயே இருந்துஉள்ளார். அரசியலில் ஏற்ற இறக்கங்களை அவர் சந்தித்ததில்லை. நேரடியாக பிரதமராகி விட்டார். திடீரென தோல்வி ஏற்பட்டது அவருக்கு மனதளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய தன்னம்பிக்கையை நாங்கள் உடைத்துவிட்டோம். அதனால்தான், தான் தனித்துவமானவன், கடவுளிடம் நேரடியாக பேசுவேன் என்று அவர் பேசத் துவங்கினார்.
இவ்வாறு அவர் பேசினார்.