ADDED : செப் 17, 2024 02:31 AM

பிஜ்னோர், நடுவழியில் நின்ற ரயில் இன்ஜினை, ரயில்வே ஊழியர்கள் தள்ளி அப்புறப்படுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் அருகே, ரயில் இன்ஜின் ஒன்று சோதனைக்காக இயக்கப்பட்டது. ரயில் நிலையம் அருகே அந்த இன்ஜின் திடீரென நின்றது. அதை இயக்குவதற்கு நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ரயில் இன்ஜின் மெக்கானிக்குகள் வந்தும், அதை இயக்க முடியவில்லை.
இதற்கிடையே, அந்த ரயில் நின்றதால், அங்கிருந்த லெவல் கிராசிங்கின் இரு பக்கமும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கூட்டம் அதிகரித்ததால், ரயிலை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் துவங்கின.
அருகில் உள்ள ஸ்டேஷன்களில் இருந்து ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, இன்ஜினை தள்ளும் முயற்சி நடந்தது. உள்ளூர் மக்களும் இணைந்து, அந்த இன்ஜினை தள்ளினர். இதையடுத்து, லெவல் கிராசிங்கில் நின்றிருந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
ரயில் இன்ஜின் தள்ளப்பட்டது தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியானது. ரயில்வே நிர்வாகம் தொடர்பாக பல விமர்சனங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.