இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: மீண்டும் தொடங்கியது ஹிஸ்புல்லா
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: மீண்டும் தொடங்கியது ஹிஸ்புல்லா
UPDATED : ஆக 04, 2024 07:07 AM
ADDED : ஆக 04, 2024 07:02 AM

பெய்ரூட்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் மத்தியக்கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது
.
ஹமாஸுக்கு ஆதரவு
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
படுகொலை
இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.
தாக்குதல் நடத்த உத்தரவு
எனவே, இஸ்மாயில் ஹனியே கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெளியேறுங்கள்
இந்தப் போர் பதற்றம் காரணமாக, லெபனானில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை, உடனடியாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
போர் பதற்றம்
இந்த நிலையில், இஸ்ரேலின் பெய்ட் ஹிலால் நகரத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.