ADDED : மார் 09, 2025 12:18 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் குடியரசு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு செலவினங்களை குறைக்க புதிய துறை ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், வெளியுறவு துறையில் மட்டும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவில்லை என, கூறப்படுகிறது.
இது தொடர்பாக, எலான் மஸ்க் - வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் தலைமையில், சமீபத்தில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது, ''நீங்கள் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை. நீங்கள் பணிநீக்கம் செய்த ஒரே நபர், என் துறையைச் சேர்ந்தவர்,'' என, மார்கோ ரூபியோவை பார்த்து, எலான் மஸ்க் கிண்டலாக கூறினார்.
இதனால் கோபமடைந்த மார்கோ ரூபியோ, ''எலான் மஸ்க் உண்மையானவராக இல்லை,'' என்றார். டிரம்ப் முன்னிலையில், இருவரும் மாறி மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, அதிபர் டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ''எலான் மஸ்க் - மார்கோ ரூபியோ இடையே எந்த பிரச்னையும் இல்லை.
நீங்கள் தேவையில்லாமல் எந்த பிரச்னையும் கிளப்ப வேண்டாம். எலான் மஸ்க் - ரூபியோ நட்புடன் பழகி வருகின்றனர். அவர்கள் இருவரும் அற்புதமாக பணியாற்றுபவர்கள்,'' என்றார்.