உக்ரைனுடன் போர் நிறுத்தம் ரஷ்ய அதிபர் புடின் நிபந்தனை
உக்ரைனுடன் போர் நிறுத்தம் ரஷ்ய அதிபர் புடின் நிபந்தனை
ADDED : மார் 09, 2025 04:25 AM

மாஸ்கோ: உக்ரைன் உடன் போர் நிறுத்தத்துக்கு, நிபந்தனைகளின் அடிப்படையில் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடிக்கிறது.
அதிரடி
போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சு, வாக்குவாதத்தில் முடிந்தது.
இதையடுத்து, உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியது. தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என, டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் உடன் குறுகியகால தற்காலிக போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கான பேச்சுக்கு தயார் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அந்த போர் நிறுத்த ஒப்பந்தம், அமைதிக்கான இறுதி தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என்றும் புடின் நிபந்தனை விதித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
'இறுதி போர் நிறுத்த ஒப்பந்த விதிகளில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும்; அமைதி பணிகளில் எந்தெந்த நாடுகள் பங்கு வகிக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என்றும் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.
வான்வழி தாக்குதல்
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா, உக்ரைன் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் நாளை மறுதினம் நடக்கிறது.
அப்போது புடின் தெரிவித்த போர் நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகள் குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.