மனைவி ஒலிம்பிக்; கணவன் பாராலிம்பிக்: தங்கம் வென்ற தம்பதிக்கு குவியும் பாராட்டு
மனைவி ஒலிம்பிக்; கணவன் பாராலிம்பிக்: தங்கம் வென்ற தம்பதிக்கு குவியும் பாராட்டு
ADDED : செப் 09, 2024 10:32 AM

பாரிஸ்: அமெரிக்க வீரர் ஹண்டர் வூட்ஹால் பாரிசில் நடந்த பாராலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். அவரது மனைவி தாரா டேவிஸ் ஒலிம்பிக் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றவர்.
பாரிசில் பாராலிம்பிக் போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹண்டர் வூட்ஹால் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில், உலக சாதனை படைத்த ஜெர்மனியின் ஜோஹன்னஸ் ப்ளோர்ஸ் மற்றும் நெதர்லாந்தின் ஆலிவர் ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரை வென்று ஹண்டர் வூட்ஹால் 46.36 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார்.
தங்கம் வென்று அசத்தல்
இவர் 5வது முறையாக, பாராலிம்பிக்கில் பதக்கங்களை வென்றுள்ளார். 2020 மற்றும் 2016ம் ஆண்டில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு வெண்கலப்பதங்களையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றார். 2022ம் ஆண்டு தாரா டேவிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி, தாரா டேவிஸ் ஒலிம்பிக் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சி
பாராலிம்பிக்கில் வெற்றி பெற்றதும் 25 வயதான ஹண்டர், மைதானத்தில் பார்த்துக் கொண்டிருந்த மனைவி தாராவை கட்டிப்பிடித்து வெற்றியை கொண்டாடினார். பின்னர் அவர், 'நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன். இதை அடைய மிகவும் மன அழுத்தத்தையும் கவலையையும் அனுபவித்தேன்' என்றார்.
தங்கம் வென்ற தம்பதிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிக்கின்றன.