அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு
ADDED : ஜூலை 04, 2024 12:12 AM

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் பொது விவாத நிகழ்ச்சியில், அதிபர் ஜோ பைடன், 81, தடுமாறியதால், அவருக்கு மாற்றாக துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பைடன் - டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சியின் போது டிரம்ப் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், பைடன் தடுமாறினார். இது ஆளும் ஜனநாயக கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்நிலையில் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.அட்லாண்டா விவாதத்துக்குப் பின், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்ற வேண்டும் என்ற வாதம் ஜனநாயக கட்சிக்குள் எழுந்துள்ளது. கருத்துக் கணிப்பின்படி, டிரம்புக்கு 47 சதவீத மக்களும், கமலா ஹாரிசுக்கு 45 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதனால், அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.அதே நேரத்தில், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சைல் ஒபாமா போட்டியிட்டால், அவருக்கு 50 சதவீத மக்களின் ஆதரவும், டிரம்புக்கு 39 சதவீத மக்களின் ஆதரவும் கிடைக்கும் என, கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.