கண்களை பார்த்து பேசுங்கள்: பாக்., பெண் எம்.பி., கண் பார்த்து பேசும் பழக்கம் இல்லை: சபாநாயகர்
கண்களை பார்த்து பேசுங்கள்: பாக்., பெண் எம்.பி., கண் பார்த்து பேசும் பழக்கம் இல்லை: சபாநாயகர்
ADDED : ஜூலை 02, 2024 02:30 AM

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பார்லிமென்டில், “என் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுங்கள்,” என, பெண் எம்.பி., விடுத்த வேண்டுகோளுக்கு, “பெண்களின் கண்களை பார்த்து பேசும் பழக்கம் இல்லை,” என, சபாநாயகர் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். இவரது அரசு பதவி ஏற்றதும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைத்தது.
பாக்., பார்லிமென்ட் கூட்டத்தொடர் நேற்று நடந்து கொண்டிருந்தபோது, இம்ரானின் பாக்., தெஹரீக் - இ - இன்சாப் கட்சியின் பெண் எம்.பி., சர்தாஜ் குல், சபையில் காரசாரமாக பேசினார். முந்தைய இம்ரான் ஆட்சியில் இணை அமைச்சராக பதவி வகித்த இவர், தற்போது எம்.பி.,யாக உள்ளார்.
சர்தால் குல் பேசும்போது சபநாயகர் அயாஸ் சாதிக், தன் முன்னால் இருந்த கோப்பை பார்த்தபடி அமர்ந்திருந்தார். இதனால் எரிச்சலடைந்த எம்.பி., சர்தாஜ் குல் சபாநாயகரை பார்த்து கூறியதாவது:
நான் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் எம்.பி.,யாக உள்ளேன். என்னை நம்பி 1.50 லட்சம் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர்.
ஆனால், நான் பேசும் போது நீங்கள் என் முகத்தை கூட பார்ப்பதில்லை. எப்போது பேசினாலும் எதிரில் இருப்பவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி பேசும்படி என் கட்சி தலைவர்கள் எனக்கு கற்றுத் தந்துள்ளனர்.
நீங்கள் என் கண்களை தவிர்ப்பதால் என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை. தயவு செய்து கண்ணாடியை அணிந்து கொண்டு என் கண்களை பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை கேட்டு சற்று அதிர்ந்து போன சபாநாயகர், “நீங்கள் பேசுங்கள் நான் கேட்கிறேன். பெண்களின் கண்கள் பார்த்து பேசுவது முறையாகாது. நான் அதை எப்போதும் தவிர்த்துவிடுவேன்,” என்றார்.
இதை கேட்ட பெண் எம்.பி., உட்பட சபையில் சிரிப்பலை எழுந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.