ADDED : செப் 14, 2024 11:12 PM

இஸ்லாமபாத்: ஆப்கானிஸ்தானில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபர்கள் சுட்டதில், 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கனின் மத்திய பகுதியில் ஏராளமான ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
கடும் நடவடிக்கை
இந்நிலையில், இயந்திர துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் வந்த மர்மநபர்கள் சிலர், 'கர்' மற்றும் தய்கன்டி மாகாணங்களுக்கு இடையே பயணித்து கொண்டிருந்த ஷியா முஸ்லிம்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில், 14 பேர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நஷ்சர் கனானி கூறுகையில், “ஈராக் நாட்டில் உள்ள புனித தலத்துக்கு சென்று விட்டு ஆப்கன் திரும்பி கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுஉள்ளது.
''ஷியா முஸ்லிம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றார்.
இது குறித்து, ஆப்கனை ஆளும் தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இது மிகவும் கொடூரமான தாக்குதல். இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்கக்கு உரிய தண்டனை வழங்கப்படும்,” என்றார்.
பிரதான எதிரி
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஐ.எஸ்., அமைப்பினர் இங்கு அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தலிபான்களின் பிரதான எதிரியாக ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் உள்ளனர்.