மேற்கு வங்கத்தை தனி நாடாக அறிவிக்க மம்தாவுக்கு பயங்கரவாதி வலியுறுத்தல்
மேற்கு வங்கத்தை தனி நாடாக அறிவிக்க மம்தாவுக்கு பயங்கரவாதி வலியுறுத்தல்
UPDATED : செப் 15, 2024 11:49 AM
ADDED : செப் 15, 2024 12:11 AM

டாக்கா: 'மேற்கு வங்கத்தை தனி நாடாக அறிவித்து, மோடியின் ஆட்சியில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்' என, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, வங்கதேச பயங்கரவாதி கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ராணுவம் நிறுவிய, நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசு அமைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சிறையில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் இயங்கி வரும், அல் - குவைதா ஆதரவு, ஏ.பி.டி., எனப்படும் அன்சாருல்லா பங்களா டீம் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜஷீமுதீன் ரஹ்மானியும், பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் சமீபத்தில் பேசியதாக கூறப்படும் வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து, அடைக்கலம் கொடுத்துள்ளது; இதை ஏற்க முடியாது. வங்கதேசத்தில் பிரச்னையை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது.
வங்கதேசம் ஒன்றும், சிக்கிமோ, பூட்டானோ அல்ல. இது, 18 கோடி முஸ்லிம்கள் உள்ள நாடு. சீனா உதவியுடன், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை துண்டிப்போம்.
ஜம்மு - காஷ்மீருக்கு விடுதலை பெற்றுத் தருவோம். இதில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உதவிட வேண்டும். இதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.
மோடியின் அரசில் இருந்து மேற்கு வங்கத்துக்கு விடுதலை தர வேண்டும். அதை தனி நாடாக அறிவிக்க வேண்டும். இதை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.