இது, இந்தியாவில் விதைத்த விதை; தாத்தா, பாட்டி பற்றி கமலா ஹாரிஸ் உருக்கம்
இது, இந்தியாவில் விதைத்த விதை; தாத்தா, பாட்டி பற்றி கமலா ஹாரிஸ் உருக்கம்
UPDATED : செப் 09, 2024 07:34 AM
ADDED : செப் 09, 2024 07:23 AM

வாஷிங்டன்: தாத்தா பாட்டிகள் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் தனது குடும்பத்துடன் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து, அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போட்டி
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியின் பேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதையொட்டி, அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தாத்தா, பாட்டி தினம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்.,8) உலக தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது தாத்தா, பாட்டி குறித்து உருக்கமாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இந்தியா
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், 'இளம் வயதின் போது இந்தியாவில் உள்ள எனது தாத்தா, பாட்டியைக் காணச் சென்றேன். அங்கு எனது தாத்தா என்னை காலை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வார். அப்போது, சமஉரிமை மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து என்னிடம் கூறுவார். ஓய்வு பெற்ற அதிகாரியான எனது தாத்தா, இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்.
அடுத்த தலைமுறை
அதேபோல, பெண்களின் உரிமை மற்றும் பிறப்பு சதவீதத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று என் பாட்டியும் குரல் கொடுத்துள்ளார். அவர்களின் பொதுச்சேவை மற்றும் போராட்டங்களே, என்னுடைய இந்த சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுத்தது. அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் அனைத்து தாத்தா, பாட்டிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.