டிரம்பை தோற்கடிக்க தக்க தருணம்: கமலா ஹாரிஸை ஆமோதித்து ஜோ பைடன் கருத்து
டிரம்பை தோற்கடிக்க தக்க தருணம்: கமலா ஹாரிஸை ஆமோதித்து ஜோ பைடன் கருத்து
ADDED : ஜூலை 22, 2024 05:17 PM

வாஷிங்டன்: கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டிரம்பை தோற்கடிக்க வேண்டிய தக்க தருணம் வந்துவிட்டது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அட்லாண்டாவில் நடந்த விவாத நிகழ்ச்சியில், டிரம்ப் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிபர் பைடன் திணறினார். இது ஜனநாயகக் கட்சி மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக, அதிபர் பைடன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்க உள்ளார். இந்நிலையில், இன்று(ஜூலை 22) எக்ஸ் சமூகவலைதளத்தில், ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளை செய்வேன்.
இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு. கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டிரம்பை தோற்கடிக்க வேண்டிய தக்க தருணம் வந்துவிட்டது. இவ்வாறு ஜோ பைடன் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் வென்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார். அதிபர் வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை துவங்கி உள்ளார்.