ADDED : ஆக 01, 2024 01:29 AM

பெய்ரூட், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும், பாலஸ்தீன முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹானியா, 62, ஈரானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது.
தாக்குதல்
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மீது அந்த அமைப்புகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
காசா பகுதி மற்றும் மேற்கு கரை ஆகியவை அடங்கியது பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகிறது. தனி நாடு அந்தஸ்து கேட்டு, பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் நிர்வகித்து வருகிறது.
கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 39,360 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 90,900 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் அனைவரையும் வீழ்த்துவோம் என, இஸ்ரேல் கூறியிருந்தது.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும், பாலஸ்தீனத்தின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹானியா, ஈரானின் டெஹ்ரானில் நேற்று கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியுள்ளது. ஆனால், இது குறித்து இஸ்ரேல் மற்றும் ஈரான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஈரான் புதிய அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரானுக்கு சென்றிருந்தபோது, இஸ்மாயில் ஹானியா கொல்லப்பட்டுள்ளார்.
இதை உறுதி செய்து, ஹமாஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2019ல் காசா பகுதியில் இருந்து வெளியேறி, கட்டாரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் ஹானியா.
பின்னடைவு
கடந்த ஏப்ரலில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹானியாவின் மூன்று மகன்கள், நான்கு பேரக் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளால், தங்களுடைய போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ஹானியா அப்போது கூறியிருந்தார்.
ஹெஸ்பெல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய படை தளபதியான பவுத் ஷகூர், நேற்று முன்தினம் லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது ஹமாஸ் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
போரை நிறுத்துவது தொடர்பாக, பயங்கரவாத அமைப்புகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது, அந்த முயற்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.