UPDATED : மே 11, 2024 02:39 PM
ADDED : மே 11, 2024 09:05 AM

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
கடந்த சில தினங்களாக ஆப்கானிஸ்தானில் காபூல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என இயற்கை பேரிடர் மேலாண்மையின் மாகாண இயக்குனர் ஹம்தார்ட் கூறினார்.