என்.ஜி.ஓ., வாயிலாக வெளிநாடுகளுக்கு நிதி ரூ.5.22 லட்சம் கோடியை ரத்து செய்தார் டிரம்ப்
என்.ஜி.ஓ., வாயிலாக வெளிநாடுகளுக்கு நிதி ரூ.5.22 லட்சம் கோடியை ரத்து செய்தார் டிரம்ப்
ADDED : பிப் 28, 2025 02:13 AM
வாஷிங்டன் :வெளிநாடுகளுக்கு தொண்டு நிறுவனங்கள் வாயிலாக வழங்கி வந்த 5.22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக ரத்து செய்துஉள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பது குறித்து பரிந்துரை வழங்குவதற்காக, அரசு சாரா துறை ஒன்றை உருவாக்கி, அதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்கை நியமித்தார்.
அவரது பரிந்துரைப்படி, வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதி உதவிகளை அதிபர் டிரம்ப் அடுத்தடுத்து ரத்து செய்து வருகிறார்.
இந்நிலையில், என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த பெரும்பாலான நிதி உதவிகளை டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
இது தொடர்பாக, 92 சதவீத யு.எஸ்.ஏ.ஐ.டி., ஒப்பந்தங்களை, ரே உத்தரவில் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
ஆப்ரிக்க நாடுகளில் வறுமை ஒழிப்பு, எய்ட்ஸ் போன்றவற்றுக்காக வழங்கி வந்த நிதியுதவியும் இதில் அடங்கும்.
நீதிமன்றங்களில் சில தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்துள்ள வழக்குகளால், மீதமுள்ள 8 சதவீத ஒப்பந்தங்கள் விட்டு வைக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, மொத்தம் 5.22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி நிறுத்தப்படுகிறது. இதில், யு.எஸ்.ஏ.ஐ.டி.,யின் கீழ் தொண்டு நிறுவனங்களின் 6,200 ஒப்பந்தங்கள் வாயிலாக வழங்கப்பட்ட 4.70 லட்சம் கோடி ரூபாயும் அடங்கும்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அமெரிக்க மக்களின் வரிப்பணம் தேவையின்றி வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கவும், அந்த பணத்தை எந்த வழியிலாவது அமெரிக்காவுக்கு பயன்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நீண்ட காலமாக வழங்கி வந்த வெளிநாட்டு உதவிகளை மறு சீரமைப்பு செய்யவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
'அமெரிக்கா செலவழிக்கும் ஒவ்வொரு டாலர் பணமும், அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதா? அமெரிக்காவை வலுப்படுத்துமா? அமெரிக்காவை மேலும் வளமாக்குமா? என்ற மூன்று கேள்விகளுக்கான பதில்களை நியாயப்படுத்துவதாக இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த முடிவால், உலகளாவிய தொண்டு நிறுவனங்கள், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் சர்வதேச நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

