ADDED : மே 08, 2024 11:55 PM

வாஷிங்டன், :அமெரிக்க அதிபர் பதவிக்கு, வரும் நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலையில் உள்ளார், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 77.
பெரும் பரபரப்பு
கடந்த 2017 முதல் 2021 வரை அதிபராக அவர் இருந்தார். 2016ல் நடந்த தேர்தலின்போது, அவருக்கு எதிராக பல பெண்களுடனான உறவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக பல பேட்டிகள் அளித்தார். 2011ல் இருந்து இது தொடர்பாக அவர் பல தகவல்களை வெளியிட்டாலும், 2016ல் அதிபர் தேர்தலுக்கு முன், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டொனால்டு டிரம்ப் உடனான உறவுகள் குறித்த தகவல்களை வெளியிடாமல் இருக்க, அவருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான வழக்கு, தற்போது நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேரில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டார்மி, ஹோட்டல் ஒன்றில் தனிமையில் சந்தித்தது தொடர்பான பல தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார்.
நடவடிக்கை
'டிவி' தொடர் ஒன்றில் வாய்ப்பு வாங்கித் தருவதாக தனக்கு டிரம்ப் உறுதி அளித்தது, உடலுறவில் ஈடுபட்டது உள்ளிட்ட விபரங்களை அவர் வெளிப்படுத்தினார்.
இந்த வழக்கின் தீர்ப்பு, அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், பெண்களுடனான டிரம்ப் நடவடிக்கைகள் தொடர்பாக, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.