அசுத்தம் செய்த தொழிலதிபர் மகன்: பாரம்பரிய மேசையை மாற்றிய டிரம்ப்
அசுத்தம் செய்த தொழிலதிபர் மகன்: பாரம்பரிய மேசையை மாற்றிய டிரம்ப்
ADDED : பிப் 22, 2025 11:22 PM

நியூயார்க்: சமீபத்தில், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அறையில், அதிபர் டிரம்பை, பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தன், 4 வயது மகனுடன், சந்தித்தார்.
அப்போது, அந்த சிறுவன் மூக்கிற்குள் விரலை விட்டு, பின், அதிபர் மேசை மீது அதை துடைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், 150 ஆண்டுகள் பழமையான மேசையை, அதிபர் டிரம்ப் மாற்றி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், 'அதிபர் அலுவலகத்தில் உள்ள மேசை மிகவும் பிரபலமானது. ஜார்ஜ் புஷ் போன்றோர் பயன்படுத்தி உள்ளனர். தற்போது இந்த மேசை புதுப்பிக்கப்படுகிறது.
'இதனால் தற்காலிக ஏற்பாடாக அதிபர் அலுவலகத்தில் புதிய மேசை வைக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டார். எலான் மஸ்க்கின் மகன், மூக்கை துடைத்ததாலேயே, பழமையான மேசையை, அதிபர் டிரம்ப் மாற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மேஜை, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'எம்.எம்.எஸ்., ரிசல்யுட்' என்ற கப்பலில் இருந்த விலை உயர்ந்த மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. இதனால் இது, 'ரிசல்யுட் டெஸ்க்' என, அழைக்கப்படுகிறது.
கடந்த 1880ல், பிரிட்டன் ராணி விக்டோரியா, அப்போதைய அமெரிக்க அதிபரான ரூதர்போர்டு பி.ஹேய்சுக்கு இந்த மேஜையை பரிசாக வழங்கினார்; நிக்சன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிபர்கள் இதை பயன்படுத்தி வந்தனர்.