ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி
ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி
ADDED : பிப் 23, 2025 02:14 AM

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் வெளிநாட்டு நிதியுதவிகளை நிர்வகிக்கும் யு.எஸ்.ஏ.ஐ.டி., அமைப்பின் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கும் டிரம்பின் உத்தரவுக்கான நீதிமன்ற தடையை வாஷிங்டன் நீதிபதி நேற்று நீக்கினார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார்.
இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த 4,000 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.
இந்த நிதியுதவிகள் அமெரிக்காவின் யு.எஸ்.ஏ.ஐ.டி., அமைப்பின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. தற்போது இந்த அமைப்புக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், வாஷிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ், நேற்று இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.
தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து, ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது, வேலைவாய்ப்பு சட்டங்களின் கீழ் தான் புகாரளிக்க முடியும். வெளிநாட்டில் உள்ள ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 30 நாட்களுக்குள் அரசின் செலவில் அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.