ADDED : மார் 03, 2025 02:29 AM

வாஷிங்டன்,
அமெரிக்க தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்கலம், நிலவில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த, 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், 'ப்ளூ கோஸ்ட் மிஷன் - 1' என்ற பெயரில், நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை, நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தியது.
இதற்கான விண்கலத்தை, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'பால்கன் - 9' ராக்கெட் உதவியுடன் ஜன., 15ல் விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, நிலவு பூமியை எதிர்கொள்ளும் பக்கத்தின் வடகிழக்கு மூலையில், 'மேர் கிரிசியம்' என்ற பெரிய படுகையில் உள்ள எரிமலை துவாரத்தின் அருகே தரையிறங்கியது.
இந்த விண்கலம், நிலவில் உள்ள மண்ணை பரிசோதிக்கும் கருவி, கதிர்வீச்சை தாங்கும் கணினி உட்பட, 10 உபகரணங்களை ஏந்திச் சென்றது.
வரும் 14ம் தேதி நிகழவுள்ள முழுமையான சந்திர கிரகணத்தை இந்த விண்கலம் படம் பிடிக்க உள்ளது. மேலும், வரும் 16ம் தேதி நிலவில் இருந்து சூரிய அஸ்தமனத்தையும் படம் பிடிக்க உள்ளது.
இந்த விண்கலத்துடன் ஏவப்பட்ட ஜப்பானிய விண்கலம், வரும் மே மாதம் நிலவில் தரையிறங்க உள்ளது.
அமெரிக்காவின், 'இன்ட்யூட்டிவ் மிஷின்ஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் விண்கலம், கடந்தாண்டு பிப்ரவரியில் நிலவில் தரையிறங்கியது.
அதன், 'லேண்டர்' கருவி நிலவில் வேகமாக தரையிறங்கியதால் இந்த முயற்சி முழுமை பெறவில்லை.
இந்நிலையில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய இரண்டாவது தனியார் விண்கலம் என்ற பெருமையை, 'ப்ளூ கோஸ்ட்' பெற்றுள்ளது.