பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
ADDED : நவ 26, 2025 06:57 AM

காபூல்: பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 9 குழந்தைகள் உட்பட, 10 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது. ஆப்கனில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும், தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானை குறி வைத்து அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல், ஆப்கன் தலிபான் அரசின் ஆதரவுடன் நடப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது-. மேலும், சமீபத்தில் ஆப்கனின் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் டி.டி.பி.,யின் முக்கிய தலைவரின் மகன் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு ஆப்கன் கண்டனம் தெரிவித்தது.
இதுமட்டுமின்றி, இருநாட்டு எல்லைக் கோடு பகுதியான டூரண்டோ பகுதியில் இருதரப்பும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன.
இந்நிலையில், ஆப்கனின் கிழக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு முழுதும் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குலில் ஒன்பது குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
நேற்று முன்தினம் காலை கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் உள்ள ராணுவ தலைமையகத்தை குறி வைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்த வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

