ADDED : ஜன 08, 2026 09:48 PM

கராகஸ்: வெனிசுலா அதிபரை அமெரிக்க படைகள் கைது செய்வதற்காக நடத்தப்பட்ட தாக்குதலில், 100 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும், கடந்த 3-ம் தேதி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு முன், தலைநகர் கராகசின், ஏழு இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதல்களில், 100 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் டியோஸ்தாதோ கபெயோ தெரிவித்துள்ளார்.
அரசு 'டிவி'க்கு அளித்த பேட்டியில், 'இந்த தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மையை மீறிய கொடிய செயல். தாக்குதலின்போது அதிபர் மதுரோவுக்கு காலிலும், அவரது மனைவிக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி மக்கள், என, 100 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக நாடு முழுதும் ஒரு வார கால துக்கம் அனுசரிக்கப்படும்,' என்றார்.

