புயல், வெள்ளத்தில் 114 பேர் பலி பிலிப்பைன்சில் அவசரநிலை அறிவிப்பு
புயல், வெள்ளத்தில் 114 பேர் பலி பிலிப்பைன்சில் அவசரநிலை அறிவிப்பு
ADDED : நவ 07, 2025 12:55 AM

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில், 'கல்மேகி' சூறாவளி புயல் தாக்கியதில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்; நுாற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய பகுதிகளை கல்மேகி சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது.
பசிபிக் பெருங்கடலில் உருவான புயல், அங்குள்ள பாலவான் தீவு அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இதனால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. ஏராளமான வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நீரில் மூழ்கி செபு நகரில் மட்டும் 71 பேர் உயிரிழந்தனர்.
இதேபோன்று நீக்ரோஸ் ஆக்சிடென்டல் மாகாணத்திலும் பலர் உயிரிழந்துள்ளனர். புயலில் சிக்கி நுாற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதைத் தவிர, 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க சென்ற விமானப்படை ஹெலிகாப்டர், தெற்கு மாகாணமான அகுசன் டெல் சுரில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள, 100 துறைமுகங்களில் 3,500க்கும் மேற்பட்ட பயணியர் மற்றும் சரக்கு லாரி ஓட்டுநர்கள் சிக்கித் தவித்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதைத் தவிர, 186 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டது.

