தென் கொரியாவை உலுக்கிய 12 மணி நேரம்: ராணுவ ஆட்சி பிரகடனம் ரத்து
தென் கொரியாவை உலுக்கிய 12 மணி நேரம்: ராணுவ ஆட்சி பிரகடனம் ரத்து
ADDED : டிச 04, 2024 07:15 AM

சியோல்: தென்கொரியாவில் அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந் நாட்டின் பார்லிமென்ட் நிராகரித்தது. இதையடுத்து, தான் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.
கிழக்காசிய நாடான தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. எதிர்க்கட்சிக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சிலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், 'தாராளவாத கொள்கைகளை பின்பற்றும் தென் கொரியாவை, வட கொரியாவின் கம்யூனிச சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது' என்று தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் மேலும், 'நம் பார்லிமென்ட், குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது. நாட்டை போதைப்பொருள் புகலிடமாகவும், நாட்டில் குழப்பமான நிலையை உருவாக்கவும் எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். கூடிய விரைவில் தேச விரோத சக்திகளை ஒழித்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவேன்' என்றும் கூறினார்.
அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே வெளியிட்ட இந்த அறிவிப்பால் தென் கொரியாவில் பதற்றமான சூழல் நிலவியது. நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டது. பார்லிமென்ட் சுற்றிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தி ராணுவத்தின் ஆட்சியை கொண்டு வருவதற்கு எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நாடு முழுவதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
இதையடுத்து தென்கொரியா பார்லிமென்டில் கூட்டத்தொடர் நடந்தது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், ராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300 சட்டமன்ற உறுப்பினர்களில் 190 பேர் அவசரநிலையை எதிர்த்து ஓட்டளித்தனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இதனால் அந்த நாட்டில் 12 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது.