ADDED : ஜூலை 31, 2025 03:02 AM
பெர்லின்: ஜெர்மனி உயிரியல் பூங்காவில் இடப்பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் விலங்கு மோதல்களை காரணம் காட்டி, கினியா பபூன் இனத்தைச் சேர்ந்த 12 குரங்குகள் கொல்லப்பட்டன.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் நியூரம்பெர்க் நகரில் அமைந்துள்ளது டைர்கார்டன் நர்ன்பெர்க் உயிரியல் பூங்கா. 170 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இங்கு, 300 விலங்கு இனங்கள் பராமரிக்கப்படுகின்றன.
அங்கு, கினியா பபூன் இனத்தைச் சேர்ந்த குரங்குகளும் அதிகம் உள்ளன. இதையடுத்து, கினியா பபூன் குரங்குகளில் சிலவற்றை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு செய்தனர்.
ஆனால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், 43 பபூன்களில் சிலவற்றைக் கொல்ல வேண்டியிருக்கும் என்று பூங்கா நிர்வாகம் கடந்த ஆண்டு தெரிவித்தது.
இந்த நிலையில் பராமரிப்பு பணி என்று, உயிரியல் பூங்கா நேற்று முன்தினம் மூடப்பட்டது. அதற்கு சிறிது நேரத்தில், 12 குரங்குகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.