ADDED : செப் 06, 2025 01:01 AM
கொழும்பு: இலங்கையில் ஜீப் மீது மோதிய பஸ் 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஒன்பது பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள படுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த தங்காலே நகராட்சி ஊழியர்கள் சிலர் பஸ்சில் சுற்றுலா சென்றனர்.
எல்லா என்ற இடத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் உள்ள தடுப்பில் மோதாமல் இருக்க, டிரைவர் பஸ்சை வேறு திசையில் திருப்பினார். அப்போது எதிரே வந்த ஜீப் மீது மோதி, 1,000 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் பயணித்த ஒன்பது பெண் ஊழியர்கள் உட்பட 15 பேர் பலியாகினர்; 15 பேர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்கள், ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் படுல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.