UPDATED : ஜூன் 17, 2025 04:27 PM
ADDED : ஜூன் 17, 2025 04:23 PM

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா தாக்குதலில் 15 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது ரஷ்யா இரவு தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. சுமார் 9 மணி நேரம் நடத்திய இந்த தாக்குதலில், 440 ட்ரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், பொது மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர். ஏவுகணை தாக்குதலில் 9 மாடி குடியிருப்பு ஒன்று நொறுங்கியது.இந்த தாக்குதல் காரணமாக அமெரிக்க குடிமகன் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. மேலும், ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான நகரங்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.