சிரியாவில் 2 நாட்களாக உள்நாட்டு கலவரம்; ஆயிரம் பேர் பலியான பரிதாபம்
சிரியாவில் 2 நாட்களாக உள்நாட்டு கலவரம்; ஆயிரம் பேர் பலியான பரிதாபம்
ADDED : மார் 09, 2025 07:57 AM

டமாஸ்கஸ்: சிரியாவில் 2 நாட்களாக நடந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில், 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள், அவருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி படைகளை துாண்டிவிட்டன. ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளதால், சிரியாவுக்கு அவர்களால் உதவ முடியவில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி துருக்கி ஆதரவுடன் புதிதாக உருவான கிளர்ச்சிப்படை முழுவீச்சில் தாக்குதலில் இறங்கியது. தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியது. இதனால் அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவுக்கு சென்று தஞ்சமடைந்தார். கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த அஹ்மத் அல்-ஷரா, சிரியாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
ஆனால், சிரியாவின் கடலோர நகரங்கள் இன்னும் ஆசாத் விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு அரசு படையினருக்கும், ஆசாதின் விசுவாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல கிராமங்களில் புகுந்து அரசு படையினர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய ஆசாத் விசுவாசிகள் பதிலடி தந்தனர்.
2 நாட்களாக நடந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில். 125 பேர் சிரிய அரசு படையைச் சேர்ந்தவர்கள்; 148 பேர் ஆசாத் விசுவாசிகள் அடங்குவர். மீதமுள்ளவர்கள் பொது மக்கள் என, சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.