பயங்கரவாத தாக்குதலில் 200 பேர் சுட்டுக்கொலை; ஆப்ரிக்காவை அதிர வைத்த சம்பவம்
பயங்கரவாத தாக்குதலில் 200 பேர் சுட்டுக்கொலை; ஆப்ரிக்காவை அதிர வைத்த சம்பவம்
ADDED : ஆக 26, 2024 10:24 AM

கயா: மேற்கு ஆப்ரிக்காவின் புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்
புர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி அமைந்த பிறகு, அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய, நஸ்ரத் அல் இஸ்லாம் வால் முஸ்லீமின் எனும் பயங்கரவாத அமைப்பு மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
கொத்து கொத்தாக
கயா நகரில் இருந்து வடக்கே 40 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பார்சலோகோ எனும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 200 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 140க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சம்
இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த கயா ராணுவத்தினர், மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி, பதுங்கு குழியில் பதுங்கியிருந்த மக்கள் மீது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகு, ஆயுதங்கள் மற்றும் ராணுவ ஆம்புலன்ஸ்களை கடத்திச் சென்றுள்ளனர். இதனால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் இருந்து வருகின்றனர்.
முதலிடம்
நார்வே அகதிகள் கவுன்சில் வெளியிட்டுள்ள பட்டியலில் உலகளவில் புலம்பெயர் மக்கள் அதிக பிரச்னைகளை சந்திக்கக் கூடிய நாடாக புர்கினா பாசோ உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 8,400 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

