ADDED : டிச 29, 2024 11:23 PM

பீஜிங்: சீனாவில் ஊழல் வழக்குகளில் கைதானவர்களை அடைக்கும் வகையில், 200க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளை அந்நாட்டு அரசு கட்டமைத்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், சீன கம்யூ., கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இங்கு, தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் ஆட்சி நடத்தி வரும் நிலையில், நாடு முழுதும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
ஊழல் தடுப்பு நடவடிக்கையாக, கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் சீன அரசு கண்காணித்து வருகிறது. சமீபத்தில், அந்நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான பாவ் பேன், முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் லீ டை உள்ளிட்டோர் ஊழல் குற்றச்சாட்டில் கைதான நிலையில், அவர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவ்வாறு ஊழல் வழக்குகளில் கைதாவோர், குறைந்தபட்சம் ஆறு மாத சிறை தண்டனையை அனுபவிப்பது கட்டாயம் என்ற நிலை உள்ளது. அக்காலக்கட்டங்களில் அவர்கள் சட்டரீதியில் வெளியே வரவும், குடும்பத்தினரை சந்திக்கவும் சீன அரசு தடை விதித்துள்ளது.
இதற்காக, குய்சோவ் மாகாணத்தின் லியுஷி பகுதியில், 200க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளை சீன அரசு கட்டமைத்துள்ளது.
கடந்த 2017 முதல் 218 சிறைச்சாலைகளை சீனா கட்டியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தபின், இந்த சிறைச்சாலைகளை கட்டமைக்கும் பணியை அந்நாடு வேகப்படுத்தியது.

