பிறப்பால் குடியுரிமை பெற டிரம்ப் தடை; எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு
பிறப்பால் குடியுரிமை பெற டிரம்ப் தடை; எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு
UPDATED : ஜன 23, 2025 02:38 PM
ADDED : ஜன 23, 2025 01:30 AM

வாஷிங்டன்: பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, 22 மாகாணங்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார்.
தாய் அல்லது தந்தையின் குடியுரிமை எந்த நிலையில் இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தம் இந்த உரிமையை வழங்குகிறது.
ஆனால், இதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, டொனால்டு டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது.
வழங்க முடியாது
அதுபோல, தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, பிப்., 19 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக, அதிபரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே பிறந்தவர்கள், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனாலும், ஏற்கனவே உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
இந்த உத்தரவுக்கு பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள, 50 மாகாணங்களில், 22 மாகாணங்கள், இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.
நடைமுறைகள்
இது குறித்து மாகாணங்களின் தலைமை வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாவது:
அதிபருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது; ஆனால் அரசு அரசர் அல்ல. நுாறாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள சட்டத்தில் அவரால் திருத்தம் செய்ய முடியாது. அதற்கு பல நடைமுறைகள் உள்ளன.
பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்கள் ஒப்புதல் பெற வேண்டும். மேலும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாகாணங்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்.
தான் நினைத்தபடி, சட்டத்தை அவரால் திருத்த முடியாது. சட்டம் ஏற்கனவே வழங்கியுள்ள உரிமைகளையும் அவரால் பறிக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைவரையும் வெளியேற்றும் உத்தரவையும் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
இது நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள, 18,000 இந்தியர்கள் வெளியேற்றப்படுவர் என்று கூறப்படுகிறது.