போதைப்பொருள் கடத்தல்; இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் தமிழர்கள்
போதைப்பொருள் கடத்தல்; இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் தமிழர்கள்
UPDATED : மார் 22, 2025 10:37 AM
ADDED : மார் 22, 2025 09:40 AM

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் 3 பேர் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகிய மூவரும் சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சரக்கு கப்பலில் 106 கிலோ 'கிரிஸ்டல் மெத்' போதைப் பொருளை கடத்தியதாக இந்தோனேசிய கடல் எல்லையில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என மூவரும் வாக்குமூலம் அளித்தனர். கப்பலின் கேப்டனை மார்ச் 14 ம் தேதி நேரில் சாட்சியம் அளிக்குமாறு இந்தோனேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் குறுக்கு விசாரணையை தவிர்க்கும் வகையில் நேரில் ஆஜராகாமல் ஆன்லைன் வாயிலாக குறைந்த நேரமே ஆஜர் ஆகி உள்ளார்.
இது கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் குற்றமற்றவர்கள் என்பதை உறுதிசெய்ய கேப்டனின் வாக்குமூலம் அவசியமாகும். இந்தோனேசிய சட்டப்படி தமிழர்கள் 3 பேர் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்இந்த வழக்கில் மூவரின் வழக்கறிஞர் யான் அப்ரிதோ கூறுகையில், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
கேப்டனுக்கு தெரியாமல் பெருமளவு போதைப் பொருளை கப்பலில் கடத்திவர வாய்ப்பில்லை. கடத்தலில் இந்த மூவருக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க நாங்கள் முயன்று வருகிறோம்' என்றார். விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்கள் 3 பேர், இந்தோனேசியா சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படும் நிலையில் உள்ளனர் என்று சிங்கப்பூர் பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது.